ADMK: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக, பாஜக உடன் ஒரு ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இந்த கூட்டணியால் மட்டுமே ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த முடியும் என்றும் அதிமுக கூறியது. சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்ய அதிமுக முன்னாள் தலைவர்கள் பலரும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தீர்வு காண முயற்சித்தனர்.
ஆனாலும் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக தலையிட கூடாது என்பதற்காக இபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டார் என்றும் சொல்லப்பட்டது. அதிமுக-பாஜக உறவு வலுவாக இருக்குமென்று நினைத்த சமயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா செய்தியாளர்களிடம், இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் இவ்வாறு கூறியது பாஜகவை தான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணம் பாஜக அதிமுகவின் உள் விவகாரங்களில் அதிகம் தலையிடுவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை, அதுவும் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை கேட்பதும் தான் என்ற செய்தியும் பரவி வருகிறது.
கடம்பூர் ராஜாவின் இந்த பேச்சு பாஜக-அதிமுகவிற்குள்ளும் விவாதங்கள் நடைபெறுவதை உறுதி செய்திருக்கிறது. ஒரு வேளை பாஜக கூட்டணி பிரிந்தால் அது அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும் அதிமுக, தவெக உடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.