DMK: கரூரில் திமுகவின் முன்னாள் அமைச்சராக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் நடந்து வருகிறது. ஏற்கனவே திமுகவில் தொகுதி பங்கீடும், ஆட்சி பங்கு குறித்தும் கூட்டணி கட்சிகள் திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தாமதமாக வந்த செந்தில் பாலாஜி மீது திருச்சி சிவா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை பெரிதாகும், இதனை திமுக அரசு எப்படி கையாளப் போகிறது என கேள்வி எழுப்பபட்ட நிலையில் தற்போது புதிய திருப்பமாக இன்னொரு கலங்கமும் வெடித்திருக்கிறது. கரூரை சேர்ந்த காங்கிரஸ் மகளிரணி தலைவர் திமுகவில் இணைந்துள்ளார். இந்த பதிவை செந்தில் பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
செந்தில் பாலாஜியின் இந்த பதிவிற்கு காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்குள் தர்மம் வேண்டுமென்றும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரசை பொது வெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும், என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். கூட்டணிக்குள் இது போன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜியின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது எனவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார். ஜோதிமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் நல்ல நட்புறவு இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் இவர்களின் மோதல் பெரிதாக வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் திமுக இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.