PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான அதிகார போட்டி தற்போது தீவிரமாகியுள்ளது. இந்த கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும், சமீபத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு இந்த மோதலை வெளிப்படையாக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.
இதனால் அன்புமணி தரப்பு உற்சாகத்தில் உள்ளனர். எனினும் ராமதாஸ் தரப்பு இந்த முடிவை ஏற்க மறுத்து சட்ட ரீதியாக சவால் விடுவதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக பாமக நிர்வாகிகள் இரண்டு பிரிவாக பிரிந்துள்ளனர். அன்புமணியின் தலைமையின் மூலமாக மட்டுமே கட்சியை வலுப்படுத்த முடியும் என்று ஒரு தரப்பும், ராமதாசின் அரசியல் அனுபவத்தாலும், சிந்தனையினாலும் தான் கட்சியை ஒழுங்குப்படுத்த முடியும் என்று ராமதாஸ் தரப்பும் கூறி வருகின்றனர்.
கட்சி இவ்வாறு பிரிந்துள்ளதால் அதன் வாக்குகளில் மாற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு பாமக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த ஜி.கே.மணியை அந்த பதவியிருந்து நீக்கிவிட்டு, வெங்கடேஸ்வரனை அன்புமணி நியமித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் பாமக தொண்டர்கள் அன்புமணி தலைமையை ஏற்று செயல்பட்டு வருகின்றனர் என்றும், பாமக எம்.எல்.ஏக்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது என்றும், உறுதியாக கூறினார். மேலும் அனைத்து கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றிறுக்கு எங்களையே அழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை ராமதாஸ் தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் பெருகி கொண்டே போவதால் கட்சியின் நிலை வலுவிழந்து வருவதாக பாமக தொண்டர்கள் கூறுகிறார்கள்.