DMK: திமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூபாய் 1.62 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். செந்தில் பாலாஜியின் நண்பர்கள், மற்றும் நெருங்கியவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், உடல்நலக்குறைவு காரணங்களுக்காக தொடர்ந்து ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவர் மீது பண மோசடி வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அவர் அமைச்சராக பதவி ஏற்பது மிகவும் தவறானது என்றும், ஜாமீன் வழங்கப்பட்டதை அவர் தனது அதிகாரத்திலும், அவரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்க்காகவும் பயன்படுத்துவது வழக்கின் நோக்கத்தையே மாற்றுகிறது என்றும் எதிர் தரப்பு வாதிட்டது.
இதனை பயன்படுத்தி அவர் இந்த புகாரிலிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட உச்சநீதி மன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஜாமீனுக்கு எதிரான வழக்கு விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பளிக்கும் என்பது அரசியல் களத்தில் பெரிய விவாதமாக எழுந்துள்ளது.