ADMK: சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் தலையிட்டும் இது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு புறம் டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கு வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்றும், மறுபுறம் ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
அதனால் டெல்லி தலைமையகம் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை விரைவில் ஓபிஎஸ்யும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இந்த சந்திப்பு எப்போது நடக்குமென்று அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.
இதற்கு பிறகு ஓபிஎஸ் செங்கோட்டையன் அண்ணன் விரும்பினால் அவரை நிச்சயம் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் செங்கோட்டையன் டிடிவி தினகரன் சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இதற்கு அவர்கள் இருவருமே மறுப்பு தெரிவித்துள்ளனர். டிடிவி தினகரனும் செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன் என்ற கருத்தையே கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று செங்கோட்டையன் ஓபிஎஸ்யை அவரது வீட்டில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், இவர்களின் இந்த சந்திப்பு அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததை மறுத்ததை போல இந்த சந்திப்பையும் மறுப்பார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.