DMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் பிரச்சாரங்கள், பொது கூட்டங்கள் என பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவும், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறது.
தற்போது புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பல வீயூகங்களை கையில் எடுத்து வருவதோடு, இளைஞர்கள் பலரையும் கட்சியில் சேர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு முன்னணி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளில் மாறி மாறி இணைந்து வருகின்றனர்.
அண்மையில் அதிமுகவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்தனர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிமுக, தவெக, பாமக போன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் 70க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த இவர்களுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்படத்தோடு, தேர்தலுக்கான பணியில் ஆர்வமாக ஈடுபட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
அப்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரசியல் களத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த சேர்க்கை நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தவெக, பாமக போன்ற கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், திமுகவிற்கு பலத்தை கூட்டிக்கொண்டே செல்கிறது என்றும் சொல்லப்படுகிறது.