ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பனிப்போர் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்ற செங்கோட்டையனின் 10 நாள் கெடுவை தொடர்ந்து அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார் இபிஎஸ்.
ஆனாலும் தன்னுடைய 10 நாள் கெடு தொடருமென்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியானது. இந்த பயணம் மத்திய அமைச்சர்களை சந்திக்கவா? என்று கேள்வி எழுப்பபட்ட போது, மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார். ஆனால் செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இவரை தொடர்ந்து இபிஎஸ்யும் டெல்லி சென்றார். அப்போதும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனை தொடர்ந்து நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்யை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த செங்கோட்டையன் நான் யாரையும் சந்திக்கவில்லை, தேவையில்லாமல் பரவும் வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்றும் கூறி முடித்தார்.
இதற்கு முன்பு டிடிவி தினகரனை சந்தித்ததாக பரவிய தகவலையும் மறுத்தார். கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தற்போது கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வரும் நிலையில், இவரின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தலைவர்களை கூட சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிறிது நாட்களாகவே இதை பற்றி எதுவும் பேசாமல் இருந்த செங்கோட்டையன் இந்த விஷயத்தில் அமைதியாக சென்று விடலாம் என்ற மன நிலைக்கு வந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் பிரிந்த தலைவர்களை உண்மையாகவே சந்தித்திருந்தாலும் அந்த தகவல் வெளியே தெரிந்தால் அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என்ற அச்சத்தினால் மட்டுமே அவர் அதை மறைக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.