ADMK AMMK: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இபிஎஸ் தலைமையிலான அதிமுக NDA கூட்டணியில் இணையும் போது சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இணைந்தது.
ஆனால் அப்பொழுது அது கண்டுகொள்ளப்படாத பட்சத்தில், தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட்டணியிலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன் நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறினார். மேலும் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். அரசியலில் நண்பன் எதிரியாகலாம், எதிரி நண்பனாகலாம் ஆனால் துரோகிக்கு இடமில்லை என்றும் கூறினார்.
இதற்கு ஓபிஎஸ்யும் வரவேற்பு தெரிவித்திருந்தார். டிடிவி தினகரனை கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியும் டிடிவி தினகரன் நிலை மாறாமலிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுக 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று கூறியதோடு, ஆட்சிக்கு வர வேண்டுமென்ற எண்ணமெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை, தன் கையில் ஆட்சியிருந்தால் மட்டும் போதுமென நினைக்கிறார் என்றும் கூறினார். டிடிவி தினகரனுக்கும், இபிஎஸ்க்கும் பிரச்சனை பெருகி கொண்டே போவதால் இது எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.