TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நேற்று முன் தினம் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் 28,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி கட்சி தலைவர்களான ஸ்டாலின், இபிஎஸ், டிடிவி தினகரன், ஓபிஎஸ், செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போன்றோரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலையும் கரூர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எல்லோரும் ஒன்று சேர்ந்து விஜய்யை கார்னர் செய்ய வேண்டாம், அவரும் தற்போது மன வேதனையில் தான் இருப்பார். இதற்கு முழுப்பொறுப்பும் விஜய் தான் என்று சொல்லி விட முடியாது. தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஒரு கூட்டத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும் விஜய் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பதால் அவரை காண வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும், அப்படி உங்களுக்கு உங்கள் தலைவர் மீது அவ்வளவு பாசமும், பற்றும் இருந்தால் அதனை வீட்டிலிருந்தே ரசிக்கலாம். ஏன் இந்த கூட்ட நெரிசலில் பச்சிளங்குழந்தைகளை தூக்கி வருகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் சனிக்கிழமைகளில் பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் கூட்டம் வர தான் செய்யும் அதனால் விஜய் தனது வார இறுதி சுற்றுப்பயணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஒரு தலைவன் என்பவன் இந்த துயரத்தை எல்லாம் தாண்டி தான் வரவேண்டும், அதனால் விஜய் மனமுடையாமல் மீண்டும் களத்திற்கு வர வேண்டும் என்றும் கூறினார்.