
TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கரூர் பிரச்சாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் தவெக தலைவர் விஜய் மீதும், கட்சியின் மீதும் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாமலிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு திண்டுக்கல்லில் மதியழகன் கைது செய்யப்பட்டார். நேற்று இரவே அவர் நீதிபதியிடம் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்பட்டது. தற்போது அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்-யும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தற்போது இவர் சேலத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரும் தேடப்பட்டு வருகிறார். இவர்கள் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத படி வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த மரணத்திற்கு தவெக தலைவர் எந்த அளவிற்கு காரணமோ அந்த அளவிற்கு இரண்டாம் கட்ட தலைவர்களும் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் கூட்டத்தை சரியாக வழி நடத்தவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.