ADMK DMK: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக, 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தொடர் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 2 ஆம் தேதி தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர் கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசின் அலட்சியமும், காவல் துறையின் கவன குறைவும் தான் காரணம் என்று கூறினார். நாட்டு மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறினார்.
அதிமுக 163 தொகுதிகளில் பிரச்சாரம் நடத்தியது. ஆனால் அதில் 5 அல்லது 6 இடத்திற்கு மட்டுமே காவல் துறை பாதுகாப்பு அளித்தது. மற்ற இடங்கள் அனைத்திற்கும் அதிமுக தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர். கரூரில் இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் துணை முதலமைச்சர் ஜாலியாக தனி விமானத்தில் துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்று விட்டார் என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளுக்கும் ஒரு நாள் விஜய் நிலைமை வரும் என்றும் கூறினார். ஒரு நபர் கமிஷன் அமைத்து உங்கள் சதியை மூடி மறைக்கலாம் என்று திட்டம் தீட்டியிருக்கிறிர்கள். ஆனால் இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். 2026 தேர்தலில் திமுகவிற்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றும் கூறினார்.