TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில், கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், மதியழகன், நிர்மல் குமார் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
மதியழகனை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த்தை 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த 41 பேர் இழப்பிற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யை விட்டுவிட்டு அவருடன் இருந்தவர்களை கைது செய்வது எந்த வகையில் நியாயம், விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் முன் வைத்து வருகின்றனர்.
விஜய்யை பார்க்க தான் அவ்வளவு கூட்டம் கூடியது, அதற்கான பொறுப்பை அவர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாதமும் வலுத்து வருகிறது. இது குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்திருக்கிறது. இந்த ஆணையம் தீர்ப்பு வழங்கும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறினார்.
விஜய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தால் அவர் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கும், ஆனால் அவர் பரப்புரைக்கு மட்டும் வந்ததால் வழக்கு பதியப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். அதே போல் 8 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு விஜய் இது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. விசாரணை ஆணையம் விஜய் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால் நிச்சயம் அவர் கைதுசெய்யப்படுவார் என்றும் கூறினார்.