DMK VCK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி திமுகவிலிருக்கும் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதி பங்கீட்டையும், ஆட்சியில் பங்கையும் கோரி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி, திமுக சாற்றையெல்லாம் குடித்து விட்டு சக்கையை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு தருகிறது என்று, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதனால் இந்த தேர்தலில் நாங்கள் ஆட்சியிலும் பங்கு கேட்போமென தனது முடிவை திட்ட வட்டமாக கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து திருமாவளவனும் கூட்டணியில் எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி விவாதத்தை கிளப்பினார். இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்க்காவது துணை முதலமைச்சர் பதவியை திருமாவளவனுக்கு வழங்க வேண்டுமென கூறி திமுக கூட்டணியில் சண்டையை மூட்டினார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க தற்போது புதிய திருப்பமாக திருமாவளவன் திமுகவிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக பாஜக 8 பேர் கொண்ட குழு அமைத்ததை போல, காங்கிரஸும் அமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியிருப்பது, திமுக அமைத்திருக்கும் குழு மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.
மேலும் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், ஏன் விஜய் மீது வழக்கு தொடுக்கவில்லை என்றும் அரசுக்கு எதிராக கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு டி.கே.எஸ் இளங்கோவன் விளக்கமளித்த போதும், திருமாவளவனின் எதிர்ப்பு, அவர் திமுக கூட்டணியில் உறுதியாக இல்லையென்பதை நிரூபிக்கிறது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.