ADMK: அதிமுகவின் முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடினார்.
ஆனால் இபிஎஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு மறுத்து விட்டார். செங்கோட்டையனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது, என்னுடைய ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினாலும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
எல்லாவற்றிற்கும் விரைவில் நன்மை நடக்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை, என்னுடய அமைதி வெற்றிக்கான அறிகுறி என்றும் அவர் கூறினார். இவர் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பதில் அவர் புதிய கட்சி துவங்குவதற்கான முன்னோட்டம் என்று சிலர் கூறி வருகின்றனர். மற்றும் சிலர் செங்கோட்டையன் அவரின் ஆதரவாளர்களை வைத்து டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைவார் என்றும் கூறுகின்றனர்.
இந்த இரண்டில் செங்கோட்டையன் எதை செய்தாலும் அது இபிஎஸ்க்கு சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ்யின் நீக்கத்தால் கட்சி வலுவிழந்து வருவதாக அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையனின் அடுத்த கட்ட முடிவு இபிஎஸ்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்குமென கூறப்படுகிறது.