TVK: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தவெகவை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த அன்று இரவு, அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் விஜய் சென்றதை அனைத்து தரப்பினரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதனை விட ஒரு படி மேலாக சென்ற பாஜக சம்பவ இடத்திற்கே சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தீவிர விசாரணை செய்து வருகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் கரூர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தவெகவின் பிரமுகரும், நடிகருமான தாடி பாலாஜி கரூர் சென்று பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் இடத்தை பார்வையிட்டார்கள், அப்போது அவர்கள் தான் இடத்தை சரியாக தேர்வு செய்திருக்க வேண்டும்.
விஜய் அரசியலுக்கு புதுசு அதனால் அவருக்கு இதனை பற்றி தெரியாது, அவரின் இடத்தில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் இதனை ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், தளபதி தற்போது என்ன நிலைமையில் இருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறினார். தவெக கட்சியிலிருப்பவரே கட்சிக்கு எதிராக பேசுவது தவெகவிலும் உட்கட்சி பூசல் தொடங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகவே உள்ளது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.