AMMK DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத இந்த பெருந்துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிகழ்விற்கு பலரும் விஜய்யிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், சிலர் இது திமுகவின் சதி வேலை என்றும் கூறி வந்தனர். இந்த பெருந்துயரத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தனி நபர் குழுவும் அமைத்து விசாரணை செய்து வருகிறது.
இதனை சிபியை கைக்கு மாற்ற வேண்டுமென பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கரூர் விபத்துக்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும் எனவும், இந்த விபத்துக்கு காரணம் விஜய் இல்லையென்றாலும் அவரை பார்க்க கூடிய கூட்டத்துக்கு அவர் முழுப்பொறுப்பை ஏற்றிருக்க வேண்டுமெனவும் கூறினார்.
விஜய் பொறுப்பேற்க்காத காரணத்தினால் தான் கோர்ட் வன்மையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறது என்றும், 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவம் ஏற்பட்டதிலிருந்தே அதனை மிகவும் சரியாக கையாள்கிறார் என்றும் கூறினார். தற்போது இருக்கும் சமயத்தில் விஜய்யை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதால் தான் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார்.
முதல்வருக்கு யாரையும் கைது செய்யும் எண்ணம் இல்லை, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு மீண்டும் நிகழ கூடாது என்பதற்காக அவர் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கரூர் சம்பவத்தை வைத்து அதிமுகவுடன் சேர்ந்து, பாஜகவும் அரசியல் செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.