விஜய் நிலைமை யாருக்கு வந்தாலும் எதிர்த்து நிற்பேன்.. அண்ணாமலை காட்டம்!!

TVK BJP: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதன் மேல் நம்பிக்கையில்லாத பாஜக அரசு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ஏன் இன்னும் விஜய் மீது வழக்கு பதியப்படவில்லை என்ற கேள்வியை பலரும் முன் வைத்து வருகின்றனர். திமுக கூட்டணியிலிருக்கும் திருமாவளவனும் இந்த கேள்வியை முன் வைத்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாமலை தனது கருத்தை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் மீது வழக்கு தொடுத்தாலும் அது செல்லுபடியாகாது என்றும், கரூரில் நடந்த விபத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு என்றும் கூறினார். திருமாவளவனின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திருமாவளவனின் பிரச்சாரத்திற்கு இந்த நிலைமை வந்தாலும், அதனையும் எதிர்த்து நிற்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஒன்றும் விஜய்யை காப்பாற்றவில்லை, பாஜக எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்றும் கூறினார். மேலும், வழக்கு பதியப்பட்டவர்களே, அதாவது இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களே இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில், பாஜக விஜய்யை காப்பாற்றுகிறது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.