TVK: நடிகர் விஜய்யின் தவெக பொதுக்கூட்டத்தில், ஏற்பட்ட இழப்புகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம், திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூரில் நடைபெற்றதால், இதற்கு திமுக அரசும், கரூரின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தான் காரணம் என்று தவெக தொண்டர்கள் கூறி வந்தனர். விஜய்யின் அரசியல் அறியாமை தான் காரணம் என்று திமுக தொண்டர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழுவும் அமைத்தது. பிறகு இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், கரூரில் நிகழ்ந்தது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும், விஜய்யிக்கு தலைமை பண்பு இல்லையென்றும் கூறியதோடு தவெக எந்த மாதிரியான கட்சி என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தவெக தொண்டர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
சமூக ஊடகங்களில் நீதிபதி குறித்து தவறான கருத்துக்களை பகிர்ந்த, புதுக்கோட்டையை சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் பார்கூரை சேர்ந்த தவெக உறுப்பினர் டேவிட், சென்னை அருகே உள்ள அஸ்தினாபுரத்தை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி சசிகுமார், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் விஜய் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியையும் பலர் முன் வைத்து வருகின்றனர்.