ADMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளிடையே கூட்டணி வியூகங்கள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பலர் தலையிட்டும் இது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் சம்பவத்தை பயன்படுத்தி, தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி விஜய்யை கூட்டணிக்குள் இழுக்கலாம் என்ற திட்டத்தையும் திட்டி வருகிறது பாஜக. ஆனால் விஜய் அதற்கு இணங்குவதாக தெரியவில்லை.
இந்த இக்கட்டான சமயத்தில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி வியூகம் போன்றவற்றை ஆலோசனை செய்வதற்க்காக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த பாண்டா மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோர் சென்னையிலுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் சென்றுள்ளார்.
பாஜக மேலிட தலைவர்கள் எப்போது ஆலோசனை நடந்த வந்தாலும் அவர்களுடன் அதிமுகவின் மூத்த தலைவர்களும் உடனிருப்பது வழக்கம். ஆனால் இந்த சந்திப்பில் யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். பாஜக வருகையால் அதிமுக மூத்த தலைவர்கள் தனித்து விடப்பட்டனரா என்ற கேள்வி எழுந்ததோடு, இபிஎஸ்யின் செயலுக்கு கண்டனமும் எழுந்துள்ளது.