ADMK BJP: 2026இல் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிகள் அனைத்தும் கூட்டணி திட்டங்களிலும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சியை முன்னிறுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. திராவிட கட்சிகளாக அறியப்பட்டு வரும் அதிமுக-பாஜகவுடனும், திமுக-காங்கிரஸ்வுடனும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சிகள் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வலுவாக தீட்டி வருகிறது.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில், அதிமுக வெற்றி பெற்றால் பாஜகவிலிருக்கும் முக்கிய தலைவர் ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டுமென இபிஎஸ்யிடம் வலியிறுத்தியதாக தெரிகிறது.
ஏற்கனவே கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தலைவர்கள் தலையிடாமல் இருந்தால் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தை பாஜக கேட்டதாகவும், அதற்கு அதிமுகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் வேளையில் இது அதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சமயத்தில் பாஜக விதித்திருக்கும் இந்த நிபந்தனைக்கு இபிஎஸ்யின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.