PMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநாடுகளையும், பிரச்சார கூட்டங்களையும் அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. ஆனாலும் பாமகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினாலும், கட்சியின் சின்னம் மற்றும் தலைவர் பதவிக்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
மேலும் அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாவும் ராமதாஸ் தரப்பு புகார் அளித்திருந்தது. இதை தொடர்ந்து அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் பதவி நீக்கம் செய்து வந்தார். இது ஒரு புறம் இருக்க அண்மையில் நிறுவனர் ராமதாஸுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காண பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வந்து சென்றனர். அப்போது வந்த கமல்ஹாசன் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது என்று பொடி வைத்து பேசியிருந்தார்.
அண்மை காலமாக ராமதாஸ் திமுகவிற்கு சாதகமாக சில செயல்கள் செய்து வருவதால், அவர் திமுக உடன் இணைவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் அன்புமணி திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருவதால் அவர் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது. அடுத்ததாக ராமதாசை சந்தித்த இபிஎஸ் அரைமணி நேரம் பேசியுள்ளார். இது கூட்டணிக்குறிய பேச்சு வார்த்தை என்றும் சொல்லப்பட்டது.
இபிஎஸ் ஏற்கனவே அன்புமணியை சந்தித்து கூட்டணிக்கு சம்மதம் வாங்கியதாக கூறப்பட்டு வந்தது. கட்சியின் நிறுவனர் திமுக பக்கமும், தலைவர் அதிமுக பக்கமும் நிற்பதால் சட்டமன்ற தேர்தலில் அது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. ராமதாசும் அன்புமணியும் இணைந்தால் மட்டுமே பாமக தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று தொண்டர்கள் கூறி வருகின்றனர்.