ADMK VSK PMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி வியூகங்கள் அசுரவேகத்தை எட்டியுள்ள நிலையில், பாமகவில் உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் நடிகர் விஜய்யின் தவெகவும், இரண்டாக பிரிந்திருக்கும் பாமகவும் எந்த கூட்டணியில் இணையும் என்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை நலம் விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் வந்த சென்றனர்.
ஆனால் விசிகவின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் மட்டும் நேரில் வராமல், தொலைபேசி மூலமாக மட்டுமே நலம் விசாரித்தார். இது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீப காலமாகவே திருமாவளவனுக்கும், பாமகவிற்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையை பயன்படுத்தி இபிஎஸ் மற்றும் நயினார், ராமதாசை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ராமதாஸை தனி தனியாக சந்தித்தது அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. விசிக, திமுக கூட்டணியிலிருக்கும் பட்சத்தில், விசிக எதிர்க்கும் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அதிமுக -பாஜக திட்டம் தீட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. ராமதாஸ் திமுகவை ஆதரிக்கும் பட்சத்தில் திருமாவின் இந்த செயல்பாடு பாமக-அதிமுக கூட்டணி உருவாக வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.