TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இக்கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடமே ஆன நிலையில் 2 மாபெரும் மாநாடுகளையும், மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் விஜய். 5 இடங்களில் பிரச்சாரம் நடத்திய தவெக, ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது விபத்தல்ல திமுகவின் சதி என்று எதிர் கட்சிகளும், தவெக தொண்டர்களும் கூறி வந்தனர். மற்றொரு தரப்பினர், தவெகவின் அரசியல் அறியாமை என்றும் விமர்சித்து வந்தனர். இதனை விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இதனை சிபிஐ கைக்கு மற்ற வேண்டுமென தவெக கோரியிருந்தது.
தனி நபர் குழுவின் மேல் நம்பிக்கையில்லாத பாஜக அரசு ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு தலைமை பண்பு இல்லையென்றும், இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை ஐ.ஜி. அஷ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தவெக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது, அதனால் இதனை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.