TVK: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் போன்றோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாகியிருந்த மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரை தொடர்ந்து தலைமறைவாகி இருக்கும் புஸ்ஸி ஆனந்தையும் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீங்கள் தானே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு புஸ்ஸி ஆனந்த் தரப்பு, நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்யவில்லை, மதியழகன் தான் ஏற்பாடு செய்தார் என்று கூறி இருந்தது. இவரின் இந்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என தவெக தரப்பினர் கூறி வந்தனர். ஒரு பிரச்சனை என்று வந்ததும், தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஓடி ஒழிவதை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.
இது குறித்து தமிழ் தேசிய ஆய்வாளர் முகிலிடம் கேட்ட போது, விஜய்யை சுற்றி இருக்கும் அரசியல் மேதாவிகள் அகற்றப்பட வேண்டும் என்றும், அவர்கள் விஜய்யுடன் இருந்தால் விஜய் அரசியலில் முன்னுக்கு வர முடியாது என்றும் கூறினார். இவர்களால் விஜயகாந்தின் நிலைமை விஜய்யிக்கு வரக்கூடும் என்றும் எச்சரித்தார். மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத தலைவர்கள், பதவியிலிருக்கும் தகுதி அற்றவர்கள் என்றும் விமர்சித்தார்.