ADMK TVK: விஜய் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் அறிவித்ததோடு, கூட்டணி அமைப்பதற்கும் தயார் எனக் கூறியிருந்தார். அவர் கூட்டணி குறித்து கூறியது முதலே, தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
அனைத்து சட்டமன்ற தேர்தலிலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணி வியூகம் பற்றிய செய்தி பரவலாக பேசப்படும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கூட்டணி குறித்து அனைவரும் பேசுவது தவெகவின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் தனது பிரச்சாரங்கள் அனைத்திலும், அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத விஜய் அதனுடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது.
கரூர் சம்பவத்திற்கு இபிஎஸ், விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது. ஆனால் இது உறுதிப்படுத்தபடாத நிலையில், இது அனைவரிடத்திலும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதிமுக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பிரச்சாரத்தில், தவெக கொடி பறத்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று கூறி உறுதிப்படுத்தினார்.
இதற்கு தவெக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஜய் தவெக தலைவர்களுடன் கலந்தாலோசித்தார் என்றும், அதில் வேண்டுமானால் அதிமுகவை, தவெக கூட்டணிக்கு வர சொல்லுங்கள், யாரை கேட்டு இபிஎஸ் பொதுவெளியில் இவ்வாறான கருத்தை உறுதிப்படுத்தினார் என்று விஜய் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.