TVK: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்க இருந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால், நிகழ்ச்சி தாமதமாகியதால் மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவாக 41 பேர் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களுடன் வீடியோ கால் மூலம் விஜய் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சிகள் தவெகவின் நிர்வாக அலட்சியம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் காவல்துறையின் கடும் கண்டனத்திற்கு எதிராக தவெக சார்பில் மேல்முறையீட்டு மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கரூர் காவல் துறையினரின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவின் அடிப்படையில் தான் தலைவர் விஜய் மற்றும் மூத்த தலைவர்களும் புறப்பட்டார்கள் என்றும் சம்பவ இடத்திலிருந்து ஓடும் நோக்கமோ தொண்டர்களை கைவிடும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பொது ஒழுங்கை காக்கும் நோக்கில் பேச்சை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். அப்போது உயிர்பலி குறித்து நாங்கள் அறியவில்லை எனவும் கூறினார்கள். பிறகு சம்பவ இடத்திலிருந்து தொண்டர்களை இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்பு கொண்ட கேட்டறிந்த போது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். அதனால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்கள் தவெக தலைவர் விஜய் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.