
BJP TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிட்டபட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், கரூர் சம்பவம் தவெகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வந்த நிலையில் கரூர் விவகாரத்தில், விஜய்க்கு பாஜக உதவுவது, அவரை கூட்டணியில் சேர்க்கதான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ஆனாலும் விஜய் அதற்கு அடிபணிவதாக தெரியவில்லை.
இதனால் பாஜக, அதிமுகவை வைத்து தவெகவை கூட்டணிக்கு கொண்டு வந்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் இதற்கும் ஒப்புக்கொள்ளாத விஜய், நான் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன், வேண்டுமென்றால் நீங்கள் தவெக உடன் கூட்டணி அமைத்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும், ஒரு வேலை நான் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணிக்கு தவெக தான் தலைமை தாங்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் குழப்பத்தில் இருந்த பாஜக-அதிமுக, கட்சியிலுள்ள அனைவரிடமும் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கட்டளையிட்டது. ஆனாலும், பாஜகவின் முயற்சிக்கு செவி சாய்க்காத விஜய், காங்கிரஸிடம் பேசி வந்தார். அப்போதும் பாஜகவும், அதிமுகவும் விஜய்யை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியை கைவிடவில்லை.
இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இது குறித்து விஜய்யிடம் பேசியதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த உரையாடலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்றும், என் அண்ணன் சிரஞ்சீவியின் நிலைமை உங்களுக்கும் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவல் வந்துள்ளது. மேலும், முதல் தேர்தலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது அரசியலில் வெற்றிக்கு வழி வகுக்காது என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலாக பாஜக -அதிமுக கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவியும், தேர்தலில் தோற்றால் வலுவான எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். கரூர் சம்பவத்தின் போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த பவன் கல்யாணின் இந்த திடீர் உரையாடல் அவர் பாஜகவின் தூதாக மாறி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.