ADMK TVK: அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியிலிருந்து சற்று ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் என்னை போன்ற மன நிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இபிஎஸ் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். அப்போதும் கூட என்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இபிஎஸ் தனது பிரச்சாரத்தை ஈரோட்டில் நடத்தி வருகிறார். மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல் பூந்துரையில், விஜய் ரசிகர் மன்றம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இபிஎஸ்யை வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் பரவியது. விஜய், இபிஎஸ் உடன் கூட்டணி சேரப் போகிறார் என்பதால், ஈரோட்டில் செங்கோட்டையனின் இடத்தை விஜய் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
தருமபுரி மற்றும் நாமக்கல்லில் அதிமுக பிரச்சாரத்தில் பரந்த தவெக கொடியை மையப்படுத்தி இந்த பேனர் அடிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் அதிமுகவிற்கான ஆதரவு பெருகி வருவதால், செங்கோட்டையன் அடுத்த கட்ட முயற்சி என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும், இந்த நிலை தொடர்ந்தால் இபிஎஸ் செங்கோட்டையனுக்கு மீண்டும் பதவிகளை வழங்க வாய்ப்பில்லை என்றும் யூகிக்கப்படுகிறது.