DMK: ஆளுங்கட்சியான திமுக 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திமுகவை எதிர்க்க தவெக என்ற புதிய கட்சியும் களமிறங்கியுள்ளது. தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்க, திமுகவின் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளது என்று நம்பப்பட்டது.
ஆனால் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்று கூறியிருந்தார். இவரை தொடர்ந்து விசிகவின் தலைவர் திருமாவளவனும் 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இபிஎஸ்யும் தனது உரையில், கே.எஸ். அழகிரிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் திமுக தலைமை குழப்பத்தில் இருந்தது. இப்படி பல்வேறு சச்சரவு நிலவி வரும் வேளையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசியது திமுகவிற்கு பேரிடியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை, கூட்டணிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளது. எங்களது உரிமையை கோருவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது.
கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ள நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டதாக நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து காங்கிரஸ் கமிட்டியில், விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆட்சி பங்கை வலியுறுத்தி வருவதால் திமுக இதற்கு சம்மதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.