PMK ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நிறுவனர் ராமதாசை காண பல்வேறு கட்சி தலைவர்களும் வந்து சென்றனர்.
அப்போது அவரை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ராமதாசை சந்திப்பதற்கு முன்பு நல்ல செய்தி கிடைத்து விட்டது என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ராமதாஸ் சமீப காலமாக திமுகவிற்கு சாதகமாக பேசி வந்தார். அதனால் அவர் திமுகவில் இணைவதற்கான சாத்திய கூறுகளை தான் கமல்ஹாசன் கூறியுள்ளார் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.
இதற்கு பிறகு இபிஎஸ் ராமதாசை சந்தித்து அரைமணி நேரம் உரையாடினார். இது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையாக தான் இருக்கும் என்று நினைத்த சமயத்தில், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இபிஎஸ் கூறினார். ஆனால் தற்போது புதிய திருப்பமாக, சேலம் அருகே சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது எதிர்க்கட்சிகளால் பொறுக்க முடியவில்லை என்று கூறிய அவர், ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து கேட்ட போது, அதை பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்று கூறி முடித்தார். இதனால் ராமதாஸ் அதிமுக உடனான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ஆனால் பாமக சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதால், இபிஎஸ் இதனை வெளிப்படையாக உறுதி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. திமுக, பாமகவை தங்களுடன் சேர்த்து கூட்டணி கட்டமைப்பை உறுதிபடுத்தி விடலாம் என்று யோசித்த சமயத்தில் பாமக- அதிமுக கூட்டணி அமைத்தது திமுக தலைமைக்கு பேரிடியாக உள்ளது.