ADMK: கரூர் சம்பவத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் தவெகவை தம் பக்கம் இழுத்து விடலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் விஜய் திமுக தனது அரசியல் எதிரி என்றும், பாஜக தனது கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். தனது பிரச்சாரம் அனைத்திலும், பாஜகவை கடுமையாக தாக்கி வரும் விஜய்யை காப்பாற்ற பாஜக தனி நபர் குழு அமைத்து விசாரணை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது.
ஆனாலும் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளார் என்று நம்பத்தகுந்த தவெக தலைவர்கள் கூறுகின்றனர். மேலும் தவெக-அதிமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் கூட்டணிக்கான தலைமையை நாங்கள் தான் ஏற்போம் என்றும், முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்றும் கூறியதாக தகவல் வெளியானது.
அதுமட்டுமல்லாமல், பாஜக உடனான கூட்டணியை முறித்தால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று விஜய் கூறியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று, இபிஎஸ், பாஜக உடனான கூட்டணியிலிருந்து விலகுவார் என்று பலரும் கூறி வந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தியும் அதே கருத்தை கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்களிடம் தவெக கொடியை பிடிக்க செய்து, அதிமுகவிற்கு மிகப்பெரிய அவமானத்தை இழைத்து விட்டார் இபிஎஸ். விஜய் பாஜகவை எதிரி என்று கூறி வரும் நிலையில், பாஜகவை கூட்டணியில் வைத்து கொண்டு தவெக கொடியை பார்த்து, அதோ பாருங்க கொடி பறக்குது என்று கூறுவது கூட்டணி கட்சிகளுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர மாட்டார் என்றும் கூறினார்.