AMMK: 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, அமமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளனைத்தும் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த தேர்தலில் அமமுக கூட்டணியே ஆட்சியை அமைக்கும். எங்கள் கூட்டணியில் இணையும் தலைவர்கள் உறுதியுடன் செயல்படுவார்கள்.
துரோகம் செய்தவர்களை மக்கள் கண்டிப்பாக வீழ்த்துவார்கள் என்றார். மேலும், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த தினகரன், பழனிசாமி கட்சித் தொண்டர்களை ஏமாற்றி மாற்றுக் கட்சி கொடியை பிடிக்க செய்கிறார். கொடநாடு வழக்கிலும் பல ஊழல் வழக்குகளிலும் சிக்கியவர். பாஜகவுக்கு எதிராக பேசிவிட்டு இன்று அதே கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார் எனக் குற்றம் சாட்டினார்.
கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை குறித்து பேசிய அவர், இதற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தமிழகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது எனக் கூறினார், மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தூக்கிச் சென்றால் பயணம் மந்தமாகும். அவரை இறக்கிவிட்டால் வேகம் கூடும் எனவும் சாடினார். 2026 தேர்தலை முன்னிட்டு அமமுக மாவட்ட அளவிலான கூட்டணித் திட்டமிடல் தீவிரமாக தொடங்கியுள்ளதாகவும், தேர்தலில் முக்கிய சக்தியாக அமமுக உருவாகும் என்றும் தினகரன் உறுதியளித்தார்.