TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அந்த நாளின் நிகழ்வுகளை விளக்கமாக பகிர்ந்தார்.
விஜய் தாமதமாக வந்தார் என்பது முற்றிலும் அபாண்டமான குற்றச்சாட்டு. கரூரில் காவல்துறையினரே எங்களை வரவேற்றனர். காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரைதான் பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு முன் எங்கும் எங்களை வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் வரவேற்பு நிகழ்ந்தது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். கூட்ட நெரிசல் நிகழ்ந்ததும், மாவட்ட எல்லையில் நாங்கள் காத்திருந்தோம்.
ஆனால் நீங்கள் வந்தால் கலவரம் ஏற்படும் என காவல்துறையினர் கூறியதால் நாங்கள் செல்ல முடியவில்லை. இதற்கான அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறினார். மேலும், தவெகவை முடக்க திமுக திட்டமிட்டு செயல்பட்டது. தவெகவினர் மீது தீவிரவாதிகளுக்கு ஒப்பான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து கட்சியைக் குற்றம்சாட்டும் வகையில் பேட்டி அளித்தனர். அதையெல்லாம் இப்போது சுப்ரீம் கோர்ட் கண்டறிந்து, எங்கள் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும், 41 உயிரிழந்த குடும்பங்களை விஜய் தத்தெடுப்பதாக முடிவு செய்துள்ளார். அவர்களுடன் இணைந்து பயணிப்பது எங்கள் கடமை என்றும், அவர்களுக்கு முழுமையான நீதியினை பெற்றுத் தரும் வரை தவெக தொடர்ந்து போராடும் என்றும் ஆதவ் அர்ஜுனா உறுதி பூர்வமாக தெரிவித்தார்.