
TVK: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவருடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு 90 சதவீதம் காரணம் விஜய்தான். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவராக, அவர் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் ஆச்சரியமாக, இந்த விபத்துக்குப் பிறகு விஜய்க்கான மக்கள் ஆதரவு ஒரு சதவீதமும் குறையவில்லை.
மாறாக, கோபம் அரசின் மீதே திரும்பியுள்ளது, என்றார். சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்க வேண்டும். மற்ற கட்சியினர் மருத்துவமனைகளில் இருந்தபோது விஜய்யின் கட்சியினர் காணப்படாதது தவெக கட்சிக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியது. விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
இது ஒரு அரசியல் தலைவராக அவருக்கான பெரிய குறைபாடாகும் என்று கூறினார். விஜய் தான் காரணம் என்றாலும், மக்கள் அவர் மீது கோபம் கொள்ளவில்லை. மாறாக, அரசின் செயலின்மையின் மீது தான் மக்களின் கோபம் வெளிப்படுகிறது. இது திமுக அரசுக்கான எச்சரிக்கை மணி அடிப்பது போல் உள்ளது என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் விஜய் தனது தவறுகளை சீர்திருத்திக் கொள்ளாவிட்டால், இன்றைய கரிசனம் நாளைய வெறுப்பாக மாறும் வாய்ப்பும் உண்டு.
இதை திமுக அரசியல் ரீதியாக சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். கடைசியாக தவெக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. பாஜகவும் இணைந்தால் அது அரசியல் சுனாமியாக மாறும். எந்த வழியிலும், மக்கள் கோபம் விஜய் மேல் அல்ல, அரசுக்கே என்பதை திமுக அரசு உணர வேண்டும், என மூத்த பத்திரிகையாளர் மணி வலியுறுத்தினார்.