
DMK BJP: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு ஆணையம் அமைக்கப்பட இருப்பதாக அறிவித்தார். அவர் உரையாற்றியபோது, ஆணவக் கொலைகளுக்கு சாதி மட்டுமன்றி பல சமூக மற்றும் மனநிலை காரணங்களும் உள்ளன. இப்படிப்பட்ட கொடூரச் சம்பவங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குற்றவாளிகள் எந்த சூழலிலும் தப்பி ஓட முடியாத வகையில் சட்டம் இயங்குகிறது என்று கூறினார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்த ஆணையம் அனைத்து தரப்பினரின் கருத்துகளைப் பெற்றுப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பை முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் மீது நிகழும் வன்முறை 68% அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்காமலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும் திமுக அரசு அலட்சியமாக நடந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாக புறக்கணித்துவிட்டு, இப்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தது ஏன்? ஏற்கனவே செயல்படாமல் கிடக்கும் பல குழுக்கள் இருக்கையில், புதிய ஆணையம் அமைப்பது மக்கள் கண்துடைப்பே. திமுக அரசு குழுக்களும் ஆணையங்களும் அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது என்றும் விமர்சித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளன.