
TTK TVK: தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றி பல முக்கியமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் இணையும் வாய்ப்பு, அதுவும் பாஜகவின்றி உருவாகும் புதிய கூட்டணி குறித்து அவர் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளார். கரூர் துயரச் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது சரியான முடிவாகும்.
மத்திய அரசு சிபிஐ மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்பு இருந்தாலும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழுவின் கீழ் நடப்பதால் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்ற நம்பிக்கை அவருக்குண்டு. அதே நேரத்தில், பாஜக மற்றும் விஜய் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அமித்ஷா இரண்டு முறை விஜய்யுடன் தொலைபேசியில் பேசியதாகவும், விஜய்யை தங்களது கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.
ஆனால், விஜய் தற்போது பேசாமல் தன்னை விலக்கி வைத்திருப்பதாகவும், அதேவேளை அவர் அதிமுகவோடு இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். விஜய், பாஜகவுடன் இணைந்தால் அவரது பிம்பம் உடைந்து விடும். ஆனால், பாஜகவை கடந்து எடப்பாடியுடன் சேர்ந்து சமயச்சார்பற்ற கூட்டணியை அமைத்தால், அது தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். அவரது கணிப்புப்படி, பாஜக கூட்டணியில் இருந்தால் அதிமுக சுமார் 5 சதவீத வாக்குகளை இழக்கும்.
ஆனால் பாஜகவை கழித்துவிட்டால், 12 சதவீத எதிர்ப்பு வாக்குகள் அவர்களிடம் திரும்பும். அந்த வாக்குகள் தான் வெற்றிக்கு காரணமாகும் என்றும், எடப்பாடியும் விஜய்யும் சேர்ந்து சென்றால் உறுதியான வெற்றி என்று அவர் வலியுறுத்தினார். அத்துடன், விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது அவருக்கு அரசியல் தற்கொலை எனவும், ஸ்டாலின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்தார். தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால், தற்காலிக நன்மை, தீமைகளைக் குறித்து யோசிக்காமல், வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும், என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
