ADMK TVK CONGRESS: வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து விட்டது. இவர்கள் இருவரும் இணைந்து அடுத்ததாக வேறு எந்த கட்சியை கூட்டணி சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர். இதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜந் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர் இபிஎஸ்யை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.
தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்ப்பது தான் இவர்களின் ஒரே குறிக்கோள். அதற்கு காரணம் அதிமுக முன்பு போல இல்லாமல் வலிமையற்று உள்ளது. பாஜகவாலும் அதிமுகவை மட்டும் வைத்து கொண்டு தமிழகத்தில் காலூன்ற முடியாது. மேலும், இவர்கள் மூவரின் ஒரே எதிர் திமுக தான். இதனால் பாஜக-அதிமுக இந்த திட்டத்தை தீட்டியது. ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணியில் சேர யோசிக்கிறார்.
இதனை தொடர்ந்து இபிஎஸ்யிடம் இரண்டு முறை போனில் பேசிய விஜய் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க கூறியதாகவும், இந்த கூட்டணியில் இபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியும், தவெக, காங்கிரஸை விட அதிமுகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தால் தவெக அதிமுக கூட்டணியில் சேராது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு அதிமுக தரப்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

