DMK: செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் உடல்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், எதிர்க்கட்சியினரும், தவெகவினரும் இது நடிப்பு என கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், மதுரையில் நடைபெற்ற தமிழ் முழக்கம் ஆளுமை திறன் மேம்பாட்டு பன்னாட்டு பயிலரங்கத்தில் பேசியபோது, பேச்சு என்பது உணர்ச்சியும் அறிவும் இணைந்து அமைந்ததாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி மட்டுமே இருந்தால் அது விலங்குக்கு சமம். அறிவு மட்டுமே இருந்தால் அது மரத்துக்கு சமம் என்று வள்ளுவர் கூறியுள்ளார். கல்லை கடவுளாக மாற்றிய மனிதன், மனிதனாக மாற மறந்துவிட்டான் என்று விமர்சகர்களுக்கு மறைமுக பதிலளித்தார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அக்டோபர் 22 அன்று நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகி சிவம், இயக்குனர் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பலரும், 400-க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

