DMK: முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நடிகரான கருணாஸ் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் மருது சகோதரர் குருபூஜைக்கும், 30-ஆம் தேதி நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கும் முதலமைச்சருக்கு அழைப்பு வழங்கினேன் என தெரிவித்தார்.
பாஜகவை எதிர்த்து ஸ்டாலின் தைரியமாக செயல்படுகிறார் என்று கூறிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முழு இந்தியாவும் கவனித்து வருகிறது. அவரின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார். கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தை விஜய் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அது குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்.
அரசியல் என்பது மக்களுக்கானது. மக்களின் துயரில் உடனிருக்க கூடியவரே உண்மையான தலைவர். அந்த வகையில் கரூரில் நடந்த துயரத்தின் போது மக்களுடன் இருந்தவர் ஸ்டாலின் தான் எனக் கூறினார். மேலும்,அதிகாரத்துக்காக மட்டுமே அரசியலில் இருப்பவர் மக்களின் துயர நேரங்களில் களத்தில் இல்லாதது கேள்வி எழுப்புகிறது. பாஜக எப்போதுமே பின்புலத்தில் இருந்து இயக்கும் கட்சி.
அவர்கள் உருவாக்கிய பாட்டுக்கு விஜய் நடனமாடும் நடிகராகிவிட்டார் என்று கடுமையாக விமர்சித்தார். அதிமுக குறித்து கருத்து தெரிவிக்கும்போது, அந்த கட்சி புரட்சி தலைவரால் உருவாக்கப்பட்ட மகத்தான இயக்கம். ஆனால் இப்போது அதன் நிர்வாகிகள் தவெக கொடியை ஏந்தி நிற்பது வேதனை அளிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அவர் பதவிக்காக தன் கட்சியையே அடமானம் வைக்க தயங்க மாட்டார் என்று கருணாஸ் குற்றம் சாட்டினார்.

