
MMK: மனிதநேய மக்கள் கட்சி 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவர் ஜவாஹிருல்லா ஆவார். கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இந்த கட்சி தோல்வியை தழுவியது. பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து ஆம்பூர், ராமநாதபுரத்தில் வெற்றி பெற்ற இந்த கட்சியை சேர்ந்த இருவர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பிறகு 2016 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய போவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.
அப்போது அந்த அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த 5 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி தோல்வியை தழுவியது. பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக உடன் கைகோர்த்த இந்த கட்சிக்கு 2 தொகுதிகளை வழங்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை தேர்தல் ஆணைய பட்டியலிலிருந்து நீக்க திட்டமிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணியிலிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியை ஏன் நீக்க கூடாது என்று அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தற்போது ஜவாஹிருல்லாவும், அப்துல் சமது ஆகிய இருவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே சட்டமன்றத்தில் இருக்கின்றனர். அதனால் தான் அந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் இது போன்ற சிக்கல்களை தடுக்க சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் ஆலோசனையை திமுகவிடம் முன்வைக்க இருப்பதாகவும் அக்கட்சி முடிவெடுத்திருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.
