ADMK TVK: தமிழக அரசியலில் புதிதாக தலை தூக்கியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறார் என்று ஆளுங்கட்சி தொடங்கி எதிர்க்கட்சி வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக திட்டம் தீட்டி வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியிருந்தார். இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை வீழ்த்த விஜய் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார். இது விஜய்யின் ஈகோவை சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது, விஜய்யை மேலும் கோபப்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு கருத்தை கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக 54 வது தொடக்க விழா மாநாட்டில் பேசிய அவர், ஸ்டாலினை இன்னும் யாரும் தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்றும், உதயநிதியை மக்கள் இன்னும் ஒரு கல் ஒரு கண்ணாடி பட கதாநாயகனாகவே பார்க்கிறார்கள் என்றும் கூறினார்.மேலும் அதிமுக கூட்டணிக்காக அலைவதாக கூறுகிறார்கள், எங்களுக்கு அந்த அவசியம் கிடையாது, எங்களுக்கு துணையாக யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம், தோழனுக்கு தோள் கொடுப்போம், அதே தோழன் காதை கடித்தால் தூக்கி கீழே போட்டு மிதிக்கவும் செய்வோம் என்று கூறினார்.
இவரின் இந்த கருத்து, விஜய்யை மறைமுகமாக எச்சரிப்பது போல இருப்பதாக உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். விஜய் ஒரு வேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் இழைத்தால் அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

