
TVK: திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறி கட்சியை துவங்கிய விஜய் தற்போது ஆளே காணாமல் போய் விட்டார். கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாநாடுகள், 5 மாவட்டங்களில் பிரச்சாரம் என கட்சியின் ஆரவாரம் பெருமளவு பேசப்பட்டது. ஆனால் அதனை அடியோடு சறுக்கும் வகையில் அரங்கேறிய நிகழ்வு தான் கரூர் சம்பவம். இந்த விபத்து நடந்து சுமார் 1 மாதமாகியும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் யாரும் இதுவரை வெளியில் தலை காட்டவில்லை.
துயர நேரத்தில் மக்களுடன் நிற்பவர் தான் உண்மையான தலைவர் என்று பலரும் கூறி வந்த சமயத்தில், சென்னை உயர் நீதிமன்றம் விஜய்க்கு தலைமை பண்பே இல்லையென்று கடுமையாக விமர்ச்சித்திருந்தது. விஜய் அரசியலுக்கு புதுசு என்பதால் இந்த மாதிரியான நேரத்தில் தலைவனுடனும், மக்களுடனும் உடனிருக்க வேண்டியது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான். ஆனால் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிறகும் கூட பொதுச் செயலாளரோ, மாவட்ட தலைவர்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இதனால் விஜய் தீவிர ஆலோசனையிலும், மிகுந்த வருத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பதவியிலிருந்து நீக்கி வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமென்று கட்சி நிர்வாகிகள் தலைமையிடம் அறிவுறுத்தி வந்தனர். இதனால் அந்த இடத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது புதிய திருப்பமாக, பொதுச் செயலாளர் பதவி கட்சியின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் பொதுச் செயலாளர் இடத்திலிருந்து அனைத்து வேலைகளையும் ஜான் ஆரோக்கியசாமி தான் செய்து வருகிறாராம். இதனால் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் அவரின் ஆதரவு பெருகி வருவதால், அவர் இந்த பதவிக்கு சரியாக இருப்பார் என்ற கருத்து தவெக உள்வட்டாரத்தில் பேசப்படுவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
