பாமகவில் அன்புமணிக்கு எண்டு கார்டு கொடுத்த ராமதாஸ்.. இனிமே அக்காவின் ஆட்டம் ஆரம்பம்!!

PMK: பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும்  இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. ராமதாஸின் மூத்த மகளின் மகனான முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கினார். இதில் உடன்பாடில்லாத அன்புமணி மேடையிலேயே தனது  எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்டது.

இதனால் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதிவியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. அன்புமணியின் தலைவர் பதவி இன்னும் சிறிது காலத்தில் முடிவடைய போகிறது என்று ராமதாசின் ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக, தருமபுரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது மூத்த மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் நியமித்திருக்கிறார் ராமதாஸ்.

செயல் தலைவர் பதவியை ராமதாஸ் ஏற்காததால் இந்த முடிவு என்று ராமதாஸ் கூறியுள்ளார். காந்திமதி ஏற்கனவே பாமக நிர்வாக குழு உறுப்பினராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கட்சி இரண்டாக பிரிந்த பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும், பாமகவின் அதிகாரம் என்னிடம் தான் உள்ளது என்று ராமதாஸ் கூறிவந்தார். தற்போது இவரின் இந்த முடிவு அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த செய்தி அன்புமணிக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அன்புமணியின் அடுத்த  கட்ட நடவடிக்கை  என்னவாக இருக்கும் என்று ஒட்டு மொத்த அரசியல் களமும் உற்று நோக்கி வருகிறது.