ADMK TMC: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெற்றி பெறுவதற்காக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடனும் கூட்டணி அமைக்கும் அமைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் மூன்றாம் நிலை கட்சியாக அறியப்படும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்டு அதிமுக தலைமையை வலியுறுத்தி வருவதாக பேசப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற பிறகு அந்த கட்சி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் மாபெரும் திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுகவுடன் யாரும் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. அனைத்து பிரச்சாரங்களில் மாபெரும் கட்சி, மிகப்பெரிய கூட்டணி என்று இபிஎஸ் சொல்லி கொண்டாலும், இது நாள் வரை பாஜகவை தவிர எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால் தற்போது அதனை தகர்த்தெறியும் வகையில், அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியை தமாகா தலைவர் ஜி.கே வாசன் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இடம் பெற்ற தமாகா கூட்டணி 32 தொகுதியில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றிருக்கிறது. தமாகா தனது தேர்தல் வரலாற்றிலேயே அதிக தொகுதிகளை வென்ற கூட்டணி என்றால் அது அதிமுக கூட்டணி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

