AMMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. தேமுதிக, பாமக, தவெக போன்ற கட்சிகள் தங்களது கூட்டணி முடிவுகளை ஜனவரியில் தான் அறிவிப்போம் என்று முடிவாக உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தைகளில் திராவிட கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னணி கட்சியான அதிமுக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர துடித்து வருகிறது.
பாஜக உடனான கூட்டணியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த அதிமுக விஜய்யை கூட்டணியில் சேர்க்க பார்க்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும் இது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதிமுக-தவெக கூட்டணியை விரும்பாத டிடிவி தினகரன், விஜய் இபிஎஸ்யுடன் கூட்டணி வைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்று கூறியுள்ளார். தற்போது அந்த கருத்தையே அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி அவர்களும் தெரிவித்துள்ளார்.
விஜய், எடப்பாடி பழனிசாமியை ஏற்று கொண்டேன் என்று இன்னுமும் கூறவில்லை. ஒரு வேலை எடப்பாடியுடன் விஜய் சேர்ந்தால் காணாமல் போய் விடுவார் என்றும் அவர் எச்சரித்தார். அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் நின்ற பெங்களூர் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து தனித்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தினகரனின் கருத்தை புகழேந்தியும் முன்வைப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக புகழேந்தி அமமுக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகளவில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

