DMK ADMK: நீண்ட நாட்களாக வெளியில் தலை காட்டாமலிருந்த சசிகலா தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளுங்கட்சியை பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என உறுதியளித்தார். திமுக அரசின் செயல்பாடுகள், குறிப்பாக நெல் கொள்முதல் முறையில் ஏற்பட்ட குளறுபடிகளை அவர் கடுமையாக விமர்சித்தார். தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதல் சரிவர நடைபெறவில்லை.
லாரி ஒப்பந்தத்தை ஒரே ஒரு நிறுவனத்துக்கே வழங்கியதால் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. ஜெயலலிதா ஆட்சியில் மாவட்ட வாரியாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் அப்போது பணிகள் சிறப்பாக நடந்தன. ஆனால் தற்போதைய திமுக அரசு நிர்வாகத்தில் தோல்வியடைந்துள்ளது. நுகர்வோர் கழகத்தில் ஒரு ஆண்டில் ஐந்து மேலாண்மை இயக்குநர்களை மாற்றியதால் நிர்வாகம் திணறுகிறது என்றார். மேலும், நெல் கொள்முதல், அரிசி அரவை ஆலைகள் இயக்கம் உள்ளிட்ட துறைகளில் முழுமையான அலட்சியம் நிலவுகிறது.
திமுக அரசு விளம்பரத்தை மட்டுமே நம்பி செயல்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லை. அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதால் தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். மேலும் அவர், 2026 தேர்தலில் மக்கள் திமுக ஆட்சியை மாற்றி, ஜெயலலிதா பாணியில் நல்ல நிர்வாகத்தை மீண்டும் நிறுவுவார்கள். அதனை நான் உறுதியாக கொண்டு வருவேன் என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையுமென்று பார்க்கப்படுகிறது.

