TVK: கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்துக்குப் பின் விஜய் மூன்று நாட்கள் மவுனம் காத்து, பின்னர் வெளியிட்ட வீடியோவில் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்தார். இதனிடையே இந்த வழக்கு சிபிஐக்கு சென்றபோது நீதி வெல்லும் என்று பதிவிட்டிருந்தார். சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து, நேற்று முன் தினம், விஜய் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆனால் அவர்களை நேரில் சென்று சந்திக்காமல் வரவழைத்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் இதை விமர்சித்தனர். அதே நேரத்தில் திமுக அரசை கடுமையாக கண்டித்த விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களுக்கெதிரான திமுக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு முளைத்து வளர்ந்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
கரூர் விபத்து காரணமாக தவெக கட்சியின் செயல்பாடுகள் தளர்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயிர்ப்புடன் செயல்பட தொடங்கியுள்ளது. இதற்காக 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை விஜய் நியமித்துள்ளார். என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் இதில் இடம்பெற்றுள்ளனர். கட்சியின் ஒற்றுமைக்காக அனைவரும் இணைந்து செயல்படுமாறு விஜய் அழைப்பு விடுத்துள்ளார். தவெகவின் இந்த புதிய எழுச்சி எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

