TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தனது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் வகையில் நவம்பர் 5, அன்று மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதன் பின்னர் தவெக எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்தது. விஜய்யின் பிரச்சாரமும் முடிவற்ற காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சம்பவத்துக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 27ஆம் தேதி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அதன்பின் வெளியிட்ட அறிவிப்பில் விஜய், சூழ்ச்சிகளும், சூதுகளும் நம்மை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாலும், நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை காக்கும் கவசம் எனக் கூறியுள்ளார். மேலும், இனி வரும் காலத்தில் நிதானமாகவும் திட்டமிட்டும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், கரூர் விபத்துக்குப் பிறகு நின்று கொண்டிருந்த தவெக மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறது எனக் கருதப்படுகிறது. நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டம் கட்சியின் எதிர்கால திசையையும் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.

