ADMK DMK BJP: தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து நேற்று இதற்கான பணிகள் தொடங்கின. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நோக்கம் வாக்காளர் பட்டியலில் காணப்படும் தவறுகள், இரட்டை வாக்கு பதிவு, இறந்தவர்களின் பெயர்கள், முகவரி இல்லாத வாக்குகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதாகும். வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு பட்டியலை துல்லியமாகவும், வெளிப்படையாகவும் தயாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மழைக்காலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடங்குவது தேவையற்றது. இது தேர்தல் ஆணையத்தின் உள்நோக்கத்துடன் கூடிய முடிவு போல தெரிகிறது.
ஏற்கனவே சரியான பட்டியல் உருவாக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது, என்று விமர்சித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. இரட்டை வாக்கு பதிவு, முகவரி தவறுகள் போன்றவை சரி செய்யப்பட வேண்டியது அவசியம். அதிமுக இந்த நடவடிக்கையை முழுமையாக வரவேற்கிறது, என்றார். பாஜக மாநில தலைவர் கரு. நாகராஜனும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மிகவும் அவசியமானது. இதனால் தேர்தலின் வெளிப்படைத்தன்மை உயரும். அனைத்து கட்சிகளும் இணைந்து இதை வெற்றிகரமாக்க வேண்டும் என கூறினார். இந்த கூட்டம், வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

