TVK: தமிழக அரசியலில் தற்போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு, அதிக தொகுதிகள் என சச்சரவுகள் நிலவுகிறது. பாமகவிலும் தந்தைக்கும் மகனுக்கும், தலைமை போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிமுகவிலும் இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே நிகழ்ந்த தொடர் தோல்விகள், முக்கிய நிர்வாகிகளின் பிரிவு, போன்ற பல செயல்பாடுகளால் கட்சியின் மீது தொண்டர்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த வரிசையில் தற்போது புதிதாக, செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் நால்வரும் ஒரு கூட்டணியாக உருவெடுத்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, இதற்கு மேல் தான் நிறைய சர்பிரைஸ் இருக்கிறது. எங்களின் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி நிலை நிறுத்தப்படும் என்று நால்வரும் தெரிவித்தனர். இந்த செய்தி அரசியல் களத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இவர்கள் நால்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இவர்கள் நால்வரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க போவதாக தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன் விஜய் உடன் கூட்டணி வைக்கப்படும் என்று மறைமுகமாக கூறியிருந்தார். மேலும் ஓபிஎஸ்யும் அரசியல் பரப்புரைக்கு தவெக கட்சிக்கு விதிக்கப்படும் விதிமுறைகள் அனாவசியமானது என்று கூறியிருந்தார். செங்கோட்டையனும், சசிகலாவும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது சசிகலா கூறியுள்ள, கருத்து விஜய் உடனான நால்வரின் கூட்டணியாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

